தமிழகத்தில் சித்திரை திருவிழா போல கேரளாவில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை எதற்காக கொண்டாடப் படுகிறது? ஓணத்தின் வரலாறு என்ன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .
கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணமாகும் . கேரளாவில் இவ்விழா அறுவடை திருவிழா, மழைப் பூக்களின் திருவிழா என்று அழைக்கப் படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் ஓணம் திருவிழா நடைபெறுகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி கேரளாவுக்கு வருகை தரும் நாளாக போற்றப்படுகிறது.
ஈஸ்வரன் கோயில் கருவறையில் அணையும் நிலையில் இருந்த விளக்கின் திரியை, எலி ஒன்று தூண்டி விட்டு சென்றதால், விளக்கு பிரகாசமாக எரிய தொடங்கியது. அறியாமல் செய்த இந்த சிவப் புண்ணியத்தின் பலனாக அந்த எலியை மறுபிறப்பில் மகா பலி சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான். மகாபலி சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரன் என்பது குறிப்பிடத் தக்கது.
மகா சக்கர வர்த்தியாக பிறந்து மக்களுக்கு நேர்மையான ஆட்சி தந்த மகாபலியை மகா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து ஆட்கொண்ட திருநாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
ஒரு ஆவணி மாதம், வளர்பிறை, துவாதசி திதியில் , வாமனனாக, சிறுவனாக, பாலகனாக, குள்ள வடிவில் வந்து, மகா பலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் யாசகம் கேட்டு, பின் ஓங்கி உலகளந்த உத்தமனாக தோன்றி மகாவிஷ்ணு அருள் புரிந்தார். வாமன ஜெயந்தியே இன்றும் ஓணம் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது.
ஓணம் என்றாலே பூக்களம் தான் முதன்மை பெறுகிறது. மகாபலியை வரவேற்கும் விதமாக, பண்டிகை தொடங்கும் நாளிலிருந்து 10ம் நாள் வரை அழகுமிக்க வண்ணமயமான மலர்களைக் கொண்டு பூக்களம் அமைக்கப் படுகிறது.
வீட்டில் உள்ள ஆண்மகன் அத்திப் பூ பறித்து வர அந்தப் பூவை முதல் நாள் கோலத்தின் நடுவில் வைப்பார்கள். முதல் நாள் ஒரு வண்ணத்திலான பூக்களால் கோலம் போடப் படுகிறது.
பிறகு இரண்டாவது நாள் இரண்டு வண்ணங்களில் என தொடர்ந்து 10ம் நாள் 10 வண்ணங்களில் பூக்களைக் கொண்டு கோலம் நிறைவு செய்யப்படுகிறது.
ஆண்டின் தொடக்கம் என்பதால் கசவு எனப்படும் இளம் மஞ்சள் கலந்த வெள்ளை நிற ஆடையை உடுத்தி இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது.
ஓணம் ஒரு அறுவடை திருவிழா என்பதால், வாழை இலையில் 25 க்கும் மேற்பட்ட காய்கறிகளுடன் 64 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு ஓணம் சத்யா என்ற விருந்து பரிமாறப்படுகிறது .
அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளுடன் இந்த ஓணம் விருந்து, மகாபலியின் ஆட்சியின் செழிப்பை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.
மலையாளத்தில் புலிகலி என்றால் ‘புலிகளின் விளையாட்டு’ என்று பொருள். கலைஞர்கள் தங்களை வேட்டையாடுபவர்களாகவும் புலிகளாகவும் மஞ்சள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் பூசி, உடுக்கை போன்ற சிலிர்ப்பூட்டும் இசையுடன் நடனமாடி ஓணம் திருவிழா கொண்டாடப் படுகிறது. ‘புலி வேட்டை’யை அடிப்படையாகக் கொண்ட இந்த நடனம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும்.
ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பு வல்லம்களி எனப்படும் பாம்பு-படகு பந்தயம் ஆகும். ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில்’ நடைபெறும் இந்த போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இத்துடன் களரி,கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.
ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பு யானை திருவிழா ஆகும்.10 நாள் திருவிழாவில் விலையுர்ந்த பொன் மணிகளால் ஆன கவசங்களாலும், பூத் தோரணங்களாலும் அலங்கரித்த யானைகள் திருவீதிகளில் வரிசையாக வலம் வருவது கண்கொள்ள காட்சியாகும்.
ஓணம் பண்டிகை அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த பண்டிகையை நலம் ஓணம் என்று போற்றப்படுகிறது.