ஈரான் ரஷ்யாவுக்கு Fath-360 எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி 200 Fath-360 ஏவுகணைகள், காஸ்பியன் கடல் வழியாக ரஷ்யாவை வந்தடைந்தது. துல்லியம் மற்றும் விரைவான தாக்குதலுக்குப் பெயர் பெற்ற இந்த ஆயுதம் ரஷ்யா உக்ரைன் போரின் பாதையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா- உக்ரைன் போர் நடந்து வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால், ரஷ்யா ஒரே நேரத்தில் இரண்டு போரை எதிர்கொள்கிறது. உக்ரைனுடனான போர் ஒன்று என்றால் நேட்டோவுடன் மற்றொரு போர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஈரானிடமிருந்து, ரஷ்யா Fath-360 ஏவுகணைகள் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் Fath-360 ஏவுகணைகளின் முதல் தொகுதி ரஷ்யாவுக்கு வந்துள்ளது.
ஈரானால் உருவாக்கப்பட்ட Fath-360, Fateh-360 என்றும் அழைக்கப்படுகிறது. Fath-360, ஏவுகணை ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.
துல்லியமான மற்றும் விரைவான தாக்குதல் திறன்களுடன் இந்த ஏவுகணை உருவாக்கப் பட்டிருக்கிறது. ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளைத் தாக்க ,செயற்கைக்கோள்-வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை என்பது குறிப்பிடத் தக்கது.
இது, ஆறு-க்கு ஆறு டிரக் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏவுகணைகள் 1,700 பவுண்டுகள் எடையும் 75 மைல்கள் வரை தாக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பல ஏவுகணைகளை ஒரு ஏவுகணையில் ஏற்றும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதனால் எதிரி இராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள்கூட இந்த ஏவுகணைகளைத் தடுக்க முடியாது என்கிறார்கள். விரைவான ஏவுதலை செயல்படுத்தும் திட-எரிபொருள் இயந்திரம், போர்க்களத்தில் இந்த ஏவுகணையின் செயல்திறனை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் HIMARS என்ற ஏவுகணையை விடவும் இந்த Fath-360, ஏவுகணை சிறந்தது என்றும் ராணுவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். Fath-360, Mach 4 அமைப்பில் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கக் கூடியது என்று கூறுகிறார்கள்.
ஏற்கெனவே ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 8,400 பவுண்டுகள் எடை கொண்ட இஸ்கண்டர் பாலிஸ்டிக் ஏவுகணை 310 மைல் தூரம் சென்று தாக்கக் கூடியது. அதேவேளையில், ரஷ்யாவுக்கு வட கொரியா வழங்கிய 7,500 பவுண்டுகள் எடை கொண்ட KN-23 ஏவுகணைகள் 560 மைல்கள் வரை சென்று தாக்கக் கூடியது. இந்த இரண்டு ஏவுகணைகளை விடவும் ஈரானின் Fath-360 மிக சிறந்ததாக தயாரிக்கப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ரஷ்யா இதுகுறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில், ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் Blinken மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் David Lammy ஆகியோர் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்திக்கும் அதே நேரத்தில்,ஈரானின் அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா வாங்கியிருக்கிறது.
உக்ரைனுக்கு எதிராக உடனடியாக ரஷ்யா இந்த ஈரானின் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் என்று கடந்த வாரம் லண்டனில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் உறுதி படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக ,அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் நேட்டோ நாடுகளும் இறுதியாக ரஷ்யா நாட்டுக்குள் முக்கிய இலக்குகளில் தங்களின் MGM-140 நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு மற்றும் பிரிட்டன் தயாரித்த புயல் நிழல் கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், ரஷ்யா உக்ரைன் வரும் வாரங்களில் மேலும் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.