அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று அமெரிக்க அதிபர் தேர்தலின் ‘நாஸ்ட்ராடாமஸ்’ என்று பிரபலமாக அறியப்படும் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆலன் லிச்ட்மேன் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான நேரடி விவாத நிகழ்வு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், கமலா ஹாரிஸின் செல்வாக்கு மக்களிடம் அதிகரித்திருப்பதை வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளும் சுட்டிக்காட்டின.
இந்நிலையில், நவீன அமெரிக்க வரலாறு மற்றும் அளவையியல் நிபுணரான லிச்ட்மேன், வரும் அதிபர் தேர்தலில் யார் வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவார்? என்று தர்க்க ரீதியாக ஆய்வு செய்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அதில் இந்த தேர்தலில், அமெரிக்க வாக்காளர்கள், துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபராக்குவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு கட்சி இடைத்தேர்தலின் போது எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது ? தற்போதைய அதிபர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறாரா? முதன்மையான போட்டியை ஒரு கட்சி தவிர்க்கிறதா ? பிரதான கட்சி வேட்பாளருக்கு எதிராக மூன்றாவது அதிபர் வேட்பாளர் தேர்தல் களத்தில் இருக்கிறாரா ?
நாட்டின் குறுகிய கால பொருளாதாரம் வலுவாக உள்ளதா? நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சி கடந்த 8 ஆண்டுகளில் சிறப்பாக வளர்ந்திருக்கிறதா ? ஆளும் கட்சி தேசிய கொள்கையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதா ? ஆட்சியில் சமூக அமைதியின்மை நீடித்ததா ? ஊழல்கள் இருக்கிறதா ? அல்லது பதவியில் இருக்கும் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா ? போன்ற 13 கேள்விகளை லிச்ட்மேன், தன் ஆய்வுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்.
கட்சியின் வலிமை மற்றும் செயல்திறன் குறித்த இந்த 13 சரியா -தவறா கேள்விகளில், எட்டு பதில்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகவும், மூன்று பதில்கள் டிரம்புக்கு ஆதரவாகவும் வந்துள்ளதாக லிச்ட்மேன் கூறியிருக்கிறார்.
இந்த அடிப்படையில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று லிச்ட்மேன் தனது கணிப்பை வெளியிட்டிருக்கிறார்.
வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விக்கான பதில் மட்டும் மாறுதலுக்கு உரியது என்று குறிப்பிட்டிருக்கும் லிக்ட்மேன், பேரழிவுக்குப் பாதை அமைக்கும் இஸ்ரேல்- காசா போரில் ஜோ பைடன் நிர்வாகம் அதிக முதலீடுகளைச் செய்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கொள்கைகளில் ட்ரம்பின் போக்கு சரியானதாக இருந்தாலும் கூட, ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று லிக்ட்மேன் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.
ஜார்ஜ் டபிள்யூ.புஷ், அல் கோரைத் தோற்கடித்த 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலைத் தவிர, கடந்த அரை நூற்றாண்டில், நடந்த 10 அதிபர் தேர்தல்களில் 9 தேர்தல்களின் முடிவுகளை மிகச் சரியாகக் கணித்திருக்கிறார் ஆலன் லிக்ட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.