விருதுநகரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப்பதிவாளர் நவராஜ் தலைமையில், ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவு சங்க பணம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி மாவட்ட பொருளாதார குற்ற பிரிவினரிடம் நவராஜ் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான முருகேசன், ராஜலிங்கம் உள்ளிட்ட 5 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சிவா என்பவரை தேடி வருகின்றனர்.