நாட்டில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை நியமித்தது.
அந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவாக மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்திலேயே அதாவது வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியையும் விரைவில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
















