டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி உரிமை கோரினார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக அதிஷி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க அதிஷி உரிமை கோரினார். டெல்லி சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அப்போது அவர் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மதுபான கொள்கை ஊழல் புகார் எதிரொலியாக அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்கவுள்ள அதிஷி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைதாகி சிறை சென்றபோது அவருக்கு பதிலாக அதிஷி அமைச்சரவையில் இடம்பெற்றார்.
சிசோடியாவின் ஆலோசகராகவும் அதிஷி செயல்பட்டார். அதிஷி அமைச்சராகி ஓராண்டே ஆன நிலையில், டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.