கோவை மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் பிடித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூரில், குடியிருப்பு அருகே குட்டையில் கிடந்த முதலையால் அச்சம் அடைந்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டையில் ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதி செய்தனர். பின்னர், குட்டையில் 10 அடிக்கும் மேல் தேங்கி நின்ற தண்ணீரை அப்புறப்படுத்திவிட்டு முதலையை பிடிக்க திட்டமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மோட்டர் பம்ப்செட் கொண்டுவரப்பட்டு, தண்ணீரை வெளியேற்றினர். பின்னர், கயிற்றில் சுருக்கு வைத்து தண்ணீரில் இருந்த முதலையை பத்திரமாக பிடித்த வனத்துறையினர் பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவித்தனர்.