சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிராட்வே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சென்னையின் பிரபல ரவுடியாக மாறியது எப்படி ? என்கவுண்டர் நடைபெற்றது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் நீ என்னவாக போகிறாய்? என ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு நான் மருத்துவராக போகிறேன், எஞ்சினியராகப் போகிறேன், கலெக்டராக போகிறேன் என சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆனால் தம்முடைய உறவினர் துரையைப் போலவே தாமும் ரவுடியாவேன் எனக்கூறியவர் தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி. மாணவ பருவத்திலேயே அடி, தடி, வழக்குகளில் கைது செய்யப்பட்ட பாலாஜி மீது ஆறு கொலை வழக்குகள், 17 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு உட்பட மொத்தமாக 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அடிக்கடி சிறைக்கு சென்றுவந்த பாலாஜிக்கு காக்காதோப்பு பகுதி ரவுடிகள் இன்பராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோரின் நட்பு கிடைத்தது. மூவரும் இணைந்து மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்தனர். பின்னாளில் இன்பராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோருக்கும் பாலாஜிக்கும் இடையே மோதல் உருவானது. தனக்கு எதிராக இருந்த யுவராஜை கொலை செய்த பாலாஜி, காக்காதோப்பு பாலாஜியாக உருவெடுத்தார்.
வடசென்னையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தடையாக இருந்த அனைவரையும் காக்க தோப்பு பாலாஜி தீர்த்து கட்டினார். வடசென்னை ரவுடி சாம்ராஜ்யத்தில் கொடிகட்ட பறந்த பாலாஜியின் எல்லை விரிவடையத் தொடங்கியது. செம்மரக் கடத்தல் தொடர்பில் இருந்தவர்களுடன் நெருக்கம் காட்டி அந்த தொழிலும் ஈடுபடத் தொடங்கினார் காக்கா தோப்பு பாலாஜி.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளை காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில், தலைமறைவானார் காக்காதோப்பு பாலாஜி
இதற்கிடையில் சென்னை அண்ணா சாலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜியும், அவரது நெருங்கிய நண்பர்களும் காரில் சென்று கொண்டிருந்த போது ரவுடி சம்போ செந்தில் தரப்பினர் நாட்டு வெடிகுண்டை வீசியதில் காக்கா தோப்பு பாலாஜி நூலிழையில் உயிர் தப்பினார். அதன் பின் போலீசார் கைது செய்யப்பட்ட பாலாஜி சிறையிலிருந்து திரும்பிய பின் ஆந்திர எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்து வழக்கம் போல ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து தொழில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கொடுங்கையூர் முல்லை நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அப்பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் காக்கா தோப்பு பாலாஜி இருப்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினருக்கும், ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார்.