வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, தேசிய ‘பிஎம் விஸ்வகர்மா’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் தேசிய ‘பிஎம் விஸ்வகர்மா’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை அவர் வழ்ங்குகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் உறுதியான ஆதரவை அடையாளப்படுத்தும் வகையில், 18 வர்த்தகங்களின் கீழ் 18 பயனாளிகளுக்கு பிரதமர், விஸ்வகர்மா கடன்களை வழங்குவார்.
மகாராஷ்டிராவின் அமராவதியில் பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைப் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பூங்காவை மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்ஐடிசி) மாநில அமலாக்க நிறுவனமாக உருவாக்கி வருகிறது.
ஜவுளித் தொழிலுக்காக 7 பிரதமரின் மித்ரா பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் பிரதமர் மித்ரா பூங்காக்கள் ஒரு முக்கிய படியாகும். இது உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்பை உருவாக்க உதவும், இது வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) உட்பட பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும். மேலும் இத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை ஊக்குவிக்கும்.
மகாராஷ்டிர அரசின் “ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாட்டு மையம்” திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார்.
15 முதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் தன்னம்பிக்கை பெறவும், பல்வேறு வேலை வாய்ப்புகளை அணுகவும் மாநிலம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் நிறுவப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் சுமார் 1,50,000 இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.