10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் பணக்கார வர்க்கத்தின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது என்று சென்ட்ரம் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை, 49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 58,200 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கும் அந்த அறிக்கை,10 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை, சுமார் 31,800 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும்,ஆண்டுதோறும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1 மில்லியன் தனிநபர்கள் இந்த வருமான அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2019ம் நிதியாண்டிலிருந்து 2024 ஆம் நிதியாண்டு வரை ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் மொத்த வருமானம், 121 சதவீதம் வளர்ச்சியடைந்து, 38 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது.
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்106 சதவீதமாக இருந்தது. மேலும், அவர்களின் மொத்த வருமானம் 40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனிடையே ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் கூட்டு வருமானம் 64 சதவீதம் அதிகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
வருமானம் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இந்தியாவில் 15 சதவீத நிதிச் செல்வம் மட்டுமே தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியாவின் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் அல்ட்ரா உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் செல்வத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கணக்கிடும் போது, கடந்த ஆண்டு 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த, அவர்களின் ஒருங்கிணைந்த நிதிச் சொத்துக்கள், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில், பொதுமக்களுக்கான வெகுஜன வணிகச் சந்தைகளும், இரட்டை இலக்கங்களில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.