இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசநாயக்கேவின் அரசியல் பயணம் பற்றி விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு…
இலங்கைக்கு தேவை பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல.. அரசியல் சித்தாந்த ரீதியிலான மாற்றமும் தான் என பரப்புரை செய்த அனுர குமார திசநாயக்கே-வை புதிய அதிபராக அந்நாட்டு மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
கடந்த அதிபர் தேர்தலில் வெறும் 3.16 சதவிகித இலங்கை மக்களின் ஆதரவை பெற்றிருந்த அனுர குமார-வின் கட்சி இந்த முறை அதிபர் பதவியை எட்டியது எப்படி என்ற பின்னணியை ஆய்வு செய்யும் போது, கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இலங்கை மக்கள் இழந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, கடந்த 2 ஆண்டுகளில் நாட்டை மேம்படுத்த என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என பரப்புரையில் பேசியிருந்தார். அதேபோல், மற்றொரு வேட்பாளரான சஜித் பிரேமதாச, தன்னுடைய குடும்பத்தின் அரசியல் பின்னணி மற்றும் பிரேமதாசாவின் மகன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
ஆனால், முந்தைய ஆட்சியாளர்களையும், அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நிராகரித்த இலங்கை மக்கள், கம்யூனிச சித்தாந்தம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் வேட்பாளர் அனுர குமார-வை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 1968-ல், இலங்கை அனுராதபுரத்தில், கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்த அனுர குமார கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் ஜனதா விமுக்தி கட்சியில் மாணவர் அமைப்பில் இணைந்தார்.
அப்போது வரை ஆயுதமேந்தி போராடி வந்த அக்கட்சி, 1990-களுக்கு பிறகு இனி ஜனநாயக ரீதியிலான அரசியலை மட்டுமே முன்னெடுப்போம் என அறிவித்தது. 1995-ல் சோசியலிச மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேர்வான அனுர குமார, ஜனதா விமுக்தி கட்சியின் மத்திய குழுவிலும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இடம் பிடித்தார்.
கடந்த 2000-மாவது ஆண்டில் நடந்த இலங்கை எம்.பி. தேர்தலில் வென்ற அனுர குமார, இலங்கை விவசாயத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி விகித்தவர்.
இலங்கை ஜனநாயக அரசியலுக்கு அனுர குமார புதியவர் அல்ல என்றாலும், கடந்த கால ஆட்சியாளர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றாமல், வெளிநாடுகளிடம் இலங்கையை அடகு வைத்து விட்டனர் என்ற பரப்புரை அந்நாட்டு மக்களை அவருக்கு ஆதரவாக இந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கச் செய்துள்ளது.
இலங்கை அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட கட்சியை சேர்ந்த அனுர குமாரவின் வெற்றி, வரலாற்றுப் பாய்ச்சலாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், இந்தியா தரப்பில் அனுர குமார-வுடன் கடந்த பிப்ரவரி மாதமே ஒரு முக்கிய சந்திப்பு நடத்தப்பட்டது.
மத்திய பாரதிய ஜனதா அரசின் அழைப்பை ஏற்று டெல்லி வந்த அனுர குமார, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து தெற்காசிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார்.
இந்தியா மட்டுமின்றி சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அதிபர் தேர்தலை உற்று நோக்கி வந்த நிலையில், அனுர குமார திசநாயகே வெற்றி வாகை சூடி இருக்கிறார். பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை தேசத்தை, மீட்டெடுக்கும் மாபெரும் சவால் அனுர குமார-வின் முன்பாக இருக்கும் இந்த சூழலில், அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.