குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : “வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் – கோரிக்கைகளை நிறைவேற்றவோ, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வை நடத்த வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்துடன் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, அதனை நிறைவேற்றவோ, நடைமுறைப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, மாற்றுத்திறனாளிகளை காலைவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது.
சென்னை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தும் அத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.