சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவமில்லை. இதை உணர்த்தும் விதமாக ஈசன் தனது உடலில் பாதியை அம்மைக்குத் தந்திருக்கிறான். அதுவே அர்த்த நாரீஸ்வரர் திருவடிவமாகும். அர்த்தநாரீஸ்வரர் எனும் திருநாமத்துடன் ஈசன் அருள் பாலிக்கும் ஒரு அற்புதக் கோயிலைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்றாகும்.
திருச்செங்கோடு என்னும் இத்தலம் நாமக்கல்லிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோடு என்றால் மலை, செங்கோடு, செங்குன்றம், செம்மலை என பல பெயர்களுடன் வழங்கப்படுகிறது திருச்செங்கோடு.
திருச்செங்கோடு என்பதற்கு சிவந்தமலை என பொருள். திரு என்பது சிறப்பு அடைமொழி. இதன் மற்றொரு பெயர் திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்பதாகும்.
சிலப்பதிகாரம் இம்மலையை முருகனுக்குரிய சிறப்புத் தலமாக குறிப்பிடுகின்றது. இதுவே இத்தலத்தின் தொன்மைக்குச் சான்றாகும்.
திருச்செங்கோட்டில் செங்கோட்டு வேலவர் கோயிலும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலும் ஒரே இடத்தில் சிறப்புடன் விளங்குகின்றன. அர்த்தநாரீஸ்வரரைச் செங்கோட்டையன் என்றும், முருகனைச் செங்கோடன் என்றும் போற்றுகின்றனர்.
செங்கோட்டின் பெரிய மலைமுகடு நாகமலை என்றும், சிறிய முகடு நந்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. நாகாசலம், நாகமலை, நாககிரி என்ற இம்மலையின் மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் மற்றும் மலை அடிவாரத்தில், ஸ்ரீகைலாச நாதர் கோயில் என இத்தலத்தில் மூன்று சிவாலயங்கள் உள்ளன.
சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறமாக காட்சியளிக்கும் இம்மலையின் தோற்றம் தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவலிங்கத்தின் அமைப்பை போல் காட்சியளிக்கிறது. இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல மலை மீது 1200 படிகள் உள்ளன.
மலையடிவாரத்தில் படியேறத் தொடங்கும் இடத்தில் ஆறுமுகப்பெருமான் தம் தேவியரோடு எழுந்தருளியுள்ள கோயில் விளங்குகிறது. இவரைப் பணிந்து படியேறத் தொடங்குவது மரபாக உள்ளது. 450 அடி உயரத்தில் உச்சிப் பிள்ளையார் கோயிலும் அமைந்திருக்கிறது.
அறுபதாம்படி என்னும் சத்தியப் படியில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இங்கு நின்று ஒருவர் சத்தியம் செய்தால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது. தீராத வழக்குகள் எல்லாம் இங்கு செய்யப்பெறும் சத்தியத்தால் தீர்ந்து விடுகின்றன என்று கூறப்படுகிறது.
அடுத்த பாபநாச தீர்த்தம் இருக்கும் இடத்தில், சுரகண்டீசுவரர் எழுந்தருளியுள்ளார். நடராசப் பெருமான் போன்ற வடிவம் கொண்ட இவர், மூன்று தலைகளுடன், மூன்று கைகளுடன், மூன்று கால்களுடனும் விளங்குகின்றார். ஜுரம் தீர்க்கும் பரமனான இவரை வழிபட்டால் கொடிய ஜுரங்கள் முதலிய நோய்கள் நீங்கும் என்று கூறப் படுகிறது.
உயர்ந்த ஐந்து நிலை இராசகோபுர வாயிலுடன் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது அர்த்த நாரீஸ்வரர் ஆலயம். மூலவர் சன்னதிக்கு முன்வாசல் இல்லை. மாறாக, ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணி அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவிலின் அர்த்தநாரீஸ்வர வடிவம் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்திலும், செங்கோட்டு வேலவனாகிய முருகப் பெருமான் கிழக்கு முகமாகவும் காட்சி அளிக்கின்றனர்.
அம்மை பார்வதி, கேதாரகௌரி விரதம் இருந்து, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு. எனவே, இக்கோயிலில் மரகத லிங்க பூஜை இன்றும் நடைபெறுகிறது.
கருவறையில் நின்ற திருக்கோலத்தில் ஆறடி உயரத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வர் அருட்பொலிவுடன் திருக்காட்சி தருகிறார். அருகில் பிருங்கி முனிவரின் செப்புத் திருமேனியும் அம்பிகை வழிபட்ட மரகதலிங்கமும் உள்ளன.
இவரைச் சுயம்பு மூர்த்தி என்றும் சித்தர்கள் நவபாசாணத்தால் உருவாக்கிய மூர்த்தி என்றும் கூறப்படும் இப்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வலப்பக்கம் ஆணுருவமாகவும் இடப்பக்கம் பெண்ணுருவமாகவும் இரு திருக்கைகளுடன் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கிறார். வலத்தொடையில் தண்டாயுதத்தை ஊன்றி உயர்த்திய வலக்கையின் விரல்களால் அதன் நுனியைப் பற்றியுள்ளார். இடக்கையைத் இடது தொடைமீது வைத்துள்ளார். திருநீற்றுப் பூச்சால் வெண்ணிறமாகக் காட்சி தருகிறார்.
தலையில் ஜடாமகுடம் தரித்து , நிலவு சூடி,கழுத்தில் ருத்ராக்ஷம் ,மாங்கல்யம் அணிந்து கையில் தண்டாயுதம் ஏந்தி அர்த்த நாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.
அம்பிகையின் அம்சம் என்பதால், சுவாமியின் இது இடது காலில் கொலுசு உள்ளது. சிவம் பாதி சக்தி பாதி என்பதால், வலதுபுறம் வேட்டியும், இடது புறம் சேலையும் அணிந்து சுவாமி அருள் பாலிக்கிறார். சுவாமியின் திருவடியில் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும் தேவ தீர்த்தம் உள்ளது. பக்தர்களுக்கு இந்த தீர்த்தமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வைகாசி விசாகத்து அன்று இத்திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இக்கோயிலில்,அம்மை தனியாக இல்லை என்பதால், உற்சவத்தில் சுவாமிக்குத் தாலி அணிவிக்கப் படுகிறது.
இந்த கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி தனது வலது காலை மேலே தூக்கி இடது பாதத்தை அபஸ்மரா புருஷனின் மீது வைத்திருக்கிறார். இந்தக் கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஆதிகேசவப் பெருமாள், நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமை உடையவர்.
நரசிம்மாவதாரத்தில், ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, நரசிம்மர் செங்குன்றத்திற்கு வந்து, இங்குள்ள கோவில் குளத்தில் நீராடி, தனது உக்கிரத்தை அடக்கியதாகவும், வனவாசத்தின் போது, பாண்டவர்கள் இக்கோயிலில் வந்து அர்த்த நாரீஸ்வரை வழிபட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது.
மலைமேல் விஷ்ணுவும் சிவனும் இருப்பதால், இத் திருக்கோயிலை கிரிவலம் வருவது சிறப்பாகக் கருதப்படுகிறது, வைகுண்டம் மற்றும் கைலாச தரிசனத்துக்குச் சமமாக இக்கோயில் தரிசனம் கருதப்படுகிறது.