செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது கொண்டாட முடியாது என்பதால் தற்போது திமுகவினர் கொண்டாடி வருகின்றனர் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா நாளை தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் சார்பில் சென்னை வடபழனியில் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் H ராஜா பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பரிமாறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் தான் வந்துள்ளார். இறுதி தீர்ப்பு வரும் போது திமுக, கொண்டாட முடியாதது. செந்தில் பாலாஜி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார், திருப்பி கொடுத்ததாக கூறியிருக்கிறார். எனவே இது செல்லாத ஒன்று. அவருக்கு தண்டனை கிடைத்தே தீரும்.
மெட்ரோ திட்டத்தில் முதல் கட்ட பணிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் திட்டத்திற்கு சரியான செலவினங்களை வகைபடுத்தாத பட்சத்தில் மத்திய அரசு அதனை நிலுவையில் தான் வைத்திருக்கும்.
மாநில கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுகவின் இரட்டை கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவின் கொள்கையில் உள்ள குறைபாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
பிறந்தநாள் முன்னிட்டு இளைஞர்களுக்கு வழங்கும் அறிவுரை குறித்த கேள்விக்கு; நேர்மையான அரசியலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், தேர்தலில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து இருக்க வேண்டும் என ஹெச். ராஜா தெரிவித்தார்.