மது ஒழிப்பு என்ற பெயரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மாநாட்டில், அக்கட்சித் தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதனை விளக்குகிறது இந்த தொகுப்பு….
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கான பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் இருந்த போதிலும், அக்கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடிக் கம்பம் அருகே அபாயகரமான உயரத்தில் ஏறி நின்று கொண்டு இறங்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார். காவல்துறையினரும், அவரை என்ன செய்வது எனத் தெரியாமல் சில நிமிடங்கள் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டனர்….
இதேபோல் விசிக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமானோர் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அங்குமிங்கும் செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது…
தள்ளுமுள்ளு காரணமாக மயக்கமடைந்த பெண்கள் சிலரை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாமல் திணறிய நிகழ்வும் அரங்கேறியது. பெண் காவலர் ஒருவரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.
மது ஒழிப்பை முன்னெடுத்த மகாத்மா காந்தி வேடம் அணிந்த முதியவரை மேடைக்கு அழைத்து வர தொண்டர்கள் முயன்ற போது, அங்கிருந்த இளைஞர்கள் ஒருவர் காந்தியுடன் செல்ஃபி எடுப்பேன் என அடம் பிடித்ததால், அந்த முதியவர் திக்கு முக்காடிப் போனார்.
நிகழ்ச்சியின் முடிவில் திருமாவளவனுடன் போட்டோ எடுக்கவும் பலர் முண்டியடித்ததால் மேடைப் பகுதியில் களேபரம் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்த உடன் விசிக தொண்டர்கள் எந்த வித கட்டுப்பாடும் இன்றி மேடையில் ஏறி குத்தாட்டம் போட்டனர்.
அங்கிருந்த பெண் காவலர் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற போதும், கூட்டம் அதிகரித்ததால், பெண் காவலர் தனது பாதுகாப்பு கருதி அங்கிருந்து அகன்று சென்றார். பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலும், விசிக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது….