இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சர்வதேச அளவில்,எண்ணெய் விலைக்கு கச்சா எண்ணெய் தான் அளவுகோலாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப் பட்ட போது, சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் அதிகமானது.
கடந்த மாதம் 70 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பேரலின் விலை,5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து 74.40 அமெரிக்க டாலராக விற்கப்படுகிறது.
ஈரானின் தாக்குதலுக்கு எப்படி இஸ்ரேல் பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்து, கச்சா எண்ணெய்யின் விலையில்,பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஈரானின் அணுஆயுத நிலையங்களை இஸ்ரேல் தாக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் மற்ற நாடுகள் இணையும் போது , கச்சா எண்ணெய் விலையில் மேலும் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக,ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சரக்கு வர்த்தகத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை கடல் வழியாக நடக்கிறது. எனவே, கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் எந்த இடையூறும் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் எண்ணெய் வர்த்தகத்துக்கான முக்கியமான வழியாக ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளது.
சவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் ஏற்றுமதியாகிறது பாய்கிறது.
தனக்கு மிக அருகில் இருக்கும் இந்த ஹோர்முஸ் ஜலசந்தி பாதையை ஈரான் கையகப்படுத்தும் வாய்ப்பு அதிகம். அப்படி ஈரான் இந்த ஜலசந்தியைத் தாக்கினால், உலக அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .
ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாகவே, செங்கடலில் ஹெளதி தீவிரவாதிகள் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால்,மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் செங்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரை பரவியுள்ளன.
இதன் காரணமாக,வர்த்தகப் பாதைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் தள்ளப்படலாம் என்றும், போக்குவரத்து நேரங்களும் அதிகரிக்கலாம் என்றும், அதன் விளைவாக, உற்பத்தி தாமதங்கள் மற்றும் அதிக பணவீக்கம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இந்தியாவிலும்,பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 692 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 2025 நிதியாண்டில் மேலும் 10 மாதங்களுக்கும் மேலாக திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானது.
இருந்தாலும், முழுமையான புவிசார் அரசியல் நெருக்கடி இந்திய பங்குச் சந்தையில் மிகப் பெரிய மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தும்என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.