சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற பாஜக தெற்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 250க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசு செய்த தவறைத்தான் சுட்டிக் காட்டுகிறோம்.
தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழகத்தில் கஞ்சா தவிர ஹெராயின் போன்ற போதைப் பொருள்களைப் பிடிப்பதற்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய புலனாய்வு அமைப்புதான் நடவடிக்கை எடுத்துது கிறது எனவும் தெரிவித்தார்.