திமுக கட்சி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளதாக அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதிமுக துணை பொது செயலாளார் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.
பின்னர் முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :
இதேபொன்ற ஏர்ஷோ ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் மெரினாவில் நடைபெற்றது. அப்போதும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள் ஆனால் சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை அதற்க்கு காரணம் ஜெயலலிதாவின் நிர்வாக திறன். ஆனால் தற்போது நடைபெற்ற ஏர்ஷோவில் அனைத்து துறைகளையும் ஒருமுகப்படுத்தி செயல்படுத்த முதல்வருக்கு நிர்வாக திறமை இல்லை.
முதல்வர் திறனற்று இருப்பதாலும் அலுவலர்கள் ஒன்றினைந்து செயல்படாததாலும் 5 பேர் உயிரிழந்து உள்ளார்கள். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் பொது துறை, சுகாதார துறை, உள்ளாட்சி அமைப்பு, சென்னை பெரு நகர அலுவலர்கள் அனைவரும் இனைந்து செயல்பட்டு இருக்க வேண்டும்.
15 லட்சம் பேர் கூடும் நிகழ்ச்சியில் குடி நீர் வசதி, காற்றோட்டமாக கூட்டத்தை பிரித்து நிற்க ஏற்பாடு செய்து இருக்க வேண்டும், காவல்துறை முழு கட்டுப்பாட்டில் இருந்து இருக்க வேண்டும்.
ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதை அரசு கவனத்தில் கொள்ளாமல் மெத்தனமாக செயல்பட்டு உள்ளது. இது முதல்வரையே சாரும் அதனால் தான் முதல்வரை செயலற்ற முதல்வர் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.
ஒரு மாநிலத்தில் துணை முதல்வர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றால் மாநிலத்தின் இரு தலைவர்கள் சம நிலையில் இருக்க வேண்டும், உதாரணமாக கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவரும் முதல்வர் போட்டியில் இருந்ததால் அதில் யாரை தவிர்த்தாலும் ஆட்சி சரியாக நடைபெறாது என்பதால் கட்சி தலைமை ஒருவருக்கு முதல்வரும், மற்றொருவருக்கு துணை முதல்வரும் பொறுப்பும் வழங்கி உள்ளது.
அதே போல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க பவன்கல்யான் உறுதுணையாக இருந்ததால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் பீகாரில் துணை முதல்வர் பாஜகவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் திமுக தான் ஆட்சியில் உள்ளது, கூட்டணி கட்சி ஆட்சியில் இல்லை.
இந்த சூழலில் தன் மகனை துணை முதல்வர் ஆக்குவது தங்களது குடும்பத்தை பாதுகாக்கவும், திமுக அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவும் அவர் தனது மகனை துணை முதல்வர் ஆக்கி உள்ளார்.
அதே போல் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கருணாநிதி அப்போது ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கினார். அதே போல் திறமை இல்லாத தன் மகனுக்கு அரசியல் பாதுகாப்பு கொடுப்பதற்காக தற்போது துணை முதல்வர் பதவி வழங்கி உள்ளார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.