இந்திய தொழிற்துறையின் கிங் மேக்கராக திகழ்ந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் காலமானார். யார் இந்த ரத்தன் டாடா? மூலை முடுக்கெல்லாம் அவரது பெயர் போற்றப்பட என்ன காரணம்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…!
1800-களின் பிற்பகுதியில் ஜம்ஷெட்ஜி டாடா என்ற பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவரால் உருவாக்கப்பட்ட டாடா நிறுவனம், இன்று சர்வதேச அளவில் தொழில்துறையில் முன்னோடி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
பருத்தி முதல் கார் வரை டாடா நிறுவனம் உற்பத்தி செய்யாத பொருட்களே கிடையாது என சொல்லலாம். இந்தியாவின் கடைக்கோடியில் இருப்பவர்களையும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன. ஜம்ஷெட்ஜி டாடா உருவாக்கிய டாடா குழுமத்தை அவருக்கு பின்னால் வந்த அனைவரும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று, அவர் கண்ட கனவை நனவாக்க பங்களித்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவரே ரத்தன் டாடா.
இந்தியாவின் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட டாடா குடும்பத்தின் வாரிசான ரத்தன் டாடாவின் தனிமனித வருவாய் நாட்டின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் வருவாயை விட அதிகமென புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எந்தவொரு பணக்காரர்கள் பட்டியலிலும் ரத்தன் டாடாவின் பெயர் முன்னிலையில் வந்ததில்லை. ஏன் எப்போதும் பட்டியலில் முன்னிலை வகிக்காத பணக்காரராக ரத்தன் டாடா திகழ்ந்து வந்தார் என்பதை அறிய, முதலில் ரத்தன் டாடா யார்? அவர் ஆற்றிய சாதனைகள் என்னென்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்வது அவசியமாகிறது.
டாடா குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாடா மற்றும் டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மருமகள் சூனி கமிசாரியட் ஆகியோருக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதியரின் மகனாக கடந்த 1937-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சூரத்தில் பிறந்தார் ரத்தன் டாடா. மாபெரும் தொழில் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் வாரிசாக பிறந்த ரத்தன் டாடாவின் பால்ய பருவம், கடும் வேதனைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது.
அவருக்கு 10 வயதிருக்கும்போதே அவரது தாய், தந்தையர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ரத்தன் டாடாவின் மனதில் இது ஆறாத ரணங்களை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தனது பாட்டியான நவாஜ்பாய் டாடாவின் அரவணைப்பில் வளரத் தொடங்கினார் ரத்தன் டாடா.
மும்பை மற்றும் ஷிம்லாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்த ரத்தன் டாடா, கல்லூரி படிப்பில் தனக்கேற்ற துறையாக கட்டடக்கலையை தேர்வு செய்தார். குடும்பத் தொழிலிலிருந்து விலகி ஒரு வெற்றிகரமான கட்டட கலைஞராக வேண்டும் என்பதே அப்போது ரத்தன் டாடாவின் எண்ணமாக இருந்தது. அதற்கு முட்டுக்கட்டை போட்ட தந்தை நேவல் டாடா, மகனை இயந்திரப் பொறியியல் படிக்க அறிவுறுத்தினார்.
குடும்பத் தொழிலில் மகனை இறக்கி விட வேண்டும் என்ற தந்தையின் எண்ணத்தை புரிந்துகொண்ட ரத்தன் டாடா, பாட்டி நவாஜ்பாய் டாடாவிடம் தனது விருப்பத்தைக் கூறி அவரது ஆதரவுடன் அமெரிக்காவின் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பயின்றார். இது அவரது தந்தைக்கு கடும் கோபத்தை உண்டாக்கியபோதும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ரத்தன் டாடா தனது கனவுகளை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்.
கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரத்தன் அதன்பின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1961-ம் ஆண்டு ரத்தன் டாடாவிற்கு IBM நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த சமயத்திலோ இந்தியாவில் டாடா குழுமம் கடும் நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருந்தது. ஜாம்ஷெட்ஜி டாடா உருவாக்கிய டாடா சாம்ராஜ்ஜியத்திற்கு அப்போது ஜே.ஆர்.டி டாடா என்றழைக்கப்படும் ஜஹான்கீர் டாடா தலைவராக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.
பொருளாதார நெருக்கடிகளாலும், இயக்குநர் குழுவின் எதிர்ப்பாலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருந்தார் ஜே.ஆர்.டி டாடா. அதனால் ரத்தன் டாடாவை இந்தியா திரும்பி வருமாறு ஜே.ஆர்.டி டாடா அழைப்பு விடுத்த நிலையில், அவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்தார் ரத்தன் டாடா.
குடும்பத் தொழிலில் தனது பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்துகொண்ட ரத்தன் டாடா, அதன் நுணுக்கங்களை தெரிந்துகொள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலும், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்திலும் சிலகாலம் கடைநிலை ஊழியராக பணியாற்றினார்.
டாடா குடும்பத்து வாரிசானபோதும் அதற்கான சலுகைகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அடிமட்டத்திலிருந்து தொழிலை கற்றால்தான் சிறந்த தொழிலதிபராக ரத்தன் டாடா திகழ முடியும் எனக்கருதினார் ஜே.ஆர்.டி டாடா. அவரை தனது வாழ்க்கையின் வழிகாட்டியாகவும், குருநாதராகவும் ஏற்றுக்கொண்டிருந்த ரத்தன் டாடா, தனது தயக்கங்களை களைந்துவிட்டு குடும்பத் தொழிலை வளர்க்க வியர்வை சிந்தி உழைக்கத் தொடங்கினார்.
ஜே.ஆர்.டி-யின் ஆணையை பின்பற்றி நெல்கோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரத்தன் டாடா, நஷ்டத்தில் இயங்கி வந்த அந்நிறுவனத்தை பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நவீன யுக்திகளை பயன்படுத்தி லாபகரமாக மாற்றினார். அதள பாதாளத்தில் இருந்த நெல்கோ நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் குறுகிய நாட்களில் கிடுகிடுவென வளரத் தொடங்கின.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெற்றியை தனதாக்கிய ரத்தன் டாடாவின் வியூகம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போட்டிகள் நிறைந்த தொழில்துறையில் இப்போது வந்த இந்த இளைஞரால் என்ன செய்துவிட முடியும் என்றெண்ணிய பலருக்கும், சிம்ம சொப்பனமாக உருவெடுத்த ரத்தன் டாடா அவர்களுக்கு தனது வெற்றிகளால் பதிலடி கொடுத்தார்.
அடுத்தடுத்து தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் திறம்பட கையாண்ட ரத்தன், டாடா குழுமத்திலுள்ள அனைவரிடத்திலும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். டாடா குழுமத்தை ரத்தன் டாடாவை விட யாராலும் திறமையாக வழிநடத்த முடியாது என்ற நிலை உருவானபோது, இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய ஜே.ஆர்.டி டாடா 1991-ம் ஆண்டு ரத்தன் டாடாவை குழுமத்தின் தலைவராக நியமித்தார்.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றபோது இந்திய அரசு தொழில்துறையில் பல கொள்கை மாற்றங்களை கொண்டு வந்தது. குறிப்பாக உலகமயமாக்கல் கொள்கையை அரசு தீவிரமாக கையாண்ட நிலையில், அது ஏற்படுத்திய வாய்ப்புகளால் பல புதிய புதிய நிறுவனங்கள் தலைதூக்கத் தொடங்கின.
இதனால் பாரம்பரிய நிறுவனங்கள் பலவும் அச்சத்திற்குள்ளானதோடு, உலகமயமாக்கலில் உள்ள சிக்கல்களை எண்ணி ஏராளமான தொழிலதிபர்களும் கலக்கத்திற்கு உள்ளாகினர். இந்த சூழ்நிலையில் ரத்தன் டாடாவோ வேறுவிதமாக சிந்தித்தார். உலகமயமாக்கல் மூலம் டாடா குழுமத்தின் தொழில்களை பல உலக நாடுகளில் நிறுவ எண்ணிய அவர், பல ஐரோப்பிய நாடுகளில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைகளை நிறுவினார்.
அதேபோல உலக நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்த பல தொழில் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, அவற்றை இந்தியாவில் டாடா நிறுவனம் மூலம் சந்தைப்படுத்தி வெற்றி கண்டார் ரத்தன் டாடா.
குறிப்பாக டாடா டீ மூலம் டெட்லே நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இந்தியாவில் சந்தைப்படுத்தியது, டாடா மோட்டார்ஸ் மூலம் ஜாகுவார், லேண்ட்ரோவர் போன்ற உயர்ரக கார்களை வாங்கி இந்தியாவில் சந்தைப்படுத்தி வெற்றி கண்டது போன்றவை ரத்தன் டாடாவின் சிறந்த தொழில் வியூகங்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டன.
நடுத்தர குடும்பங்களின் கார் கனவை நனவாக்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உருவாக்கம், இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் என டாடா குழுமத்தை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவராக திகழ்ந்தார் ரத்தன் டாடா.
இந்த உச்சத்தை தொட அவர் இழந்த பொருட்செலவுகளையும், எதிர்கொண்ட இன்னல்களையும் சொல்லி மாளாது. ஆனால் எல்லா தடைகளையும் துடைத்தெறிந்து இந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் ரத்தன் டாடா என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஊழியர்கள் நலனில் அக்கரை காட்டுவதில் டாடா குழுமத்தை மிஞ்சியவர்கள் இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தனது நிறுவனத்தின் தூண்களான ஊழியர்களை கொண்டாடி அவர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்திருக்கிறார் ரத்தன் டாடா.
டாடா குழுமத்தின் ஊழியர்களைத்தாண்டி சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே ரத்தன் டாடா திகழ்ந்து வந்திருக்கிறார். இந்தியா சந்தித்த பல பேரிடர்களின்போது ஒரு சிறந்த குடிமகனாக இருந்து நிதி உதவிகளை வழங்கி சமூகக் கடமையாற்றியிருக்கிறார் ரத்தன் டாடா.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அதன் தடுப்புப் பணிகளுக்காக ரத்தன் டாடா தனது தனிப்பட்ட நிதியில் இருந்து 500 கோடி ரூபாயை வழங்கினார். பின்னர் அந்த தொகை டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பால் ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரித்தது.
தமிழ்நாடு மீதும், தமிழர்கள் மீதும் நீங்காத அன்பு கொண்டிருந்த ரத்தன் டாடா, கொரோனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்பிலான 40 ஆயிரத்திற்கும் அதிகமான PCR கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கினார்.
திருமணமே செய்துகொள்ளாத ரத்தன் டாடாவின் காதல் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் ஒரு போர் என்பதை உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தபோது தனது மனதிற்கு பிடித்த பெண்ணை காதலித்து வந்த ரத்தன் டாடா, அவருடன் தனது வருங்காலக் கனவுகளை கட்டமைத்துக்கொண்டிருந்தபோது, இந்தியாவில் இருந்த ரத்தனின் பாட்டி நவாஜ்பாய் டாடாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் ரத்தன் டாடா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் அப்போது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் போர் மூண்டதால், ரத்தன் டாடாவுடன் அவரது காதலியை அனுப்ப அவரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களின் காதல் உறவு முறிந்துபோனது.
2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்ட ரத்தன் டாடா, அவரது தூரத்து உறவான சைரஸ் மிஸ்த்ரி என்பவரை டாடா குழுமத்தின் தலைவராக நியமித்தார். அவரின் இந்த முடிவு பின்னாளில் அவருக்கே தலைவலியாக மாறும் என்பதை ரத்தன் டாடா உணர்ந்திருக்கவில்லை.
ஊழல் புகார்களில் சிக்கிய சைரஸ் மிஸ்திரியை இயக்குநர்கள் குழுவின் ஆலோசனைப்படி, தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கிய ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது சைரஸ் மிஸ்திரி கொடுத்த பல இடையூறுகளை பெரும் சட்டப்போராட்டங்கள் மூலம் ரத்தன் டாடா வென்று காட்டினார்.
அதன்பிறகு டாடா குழுமத்தின் தலைவராக யாரை நியமிக்கலாம் என தீவிர ஆலோசனை மேற்கொண்ட ரத்தன் டாடாவின் மனதில், டாடா நிறுவனத்தின் TCS தலைவராக இருந்த தமிழரான நடராஜன் சந்திரசேகரின் பெயர் நினைவுக்கு வந்தது.
இவரைவிட நம்பிக்கையானவர்கள் கிடைக்கமாட்டார்கள் என தீர்மானித்த ரத்தன் டாடா, நடராஜன் சந்திரசேகரை டாடா குழுமத்தின் தலைவராக நியமித்தார். பாரம்பரியமிக்க டாடா குழுமத்தின் தலைவராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டது அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பெருமைமிக்க தருணம் என்றே சொல்ல வேண்டும்.
தனது வாழ்நாளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய ரத்தன் டாடாவிற்கு கடந்த 2000-ம் ஆண்டில் பத்ம பூஷன் விருதையும், 2008-ம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் மத்திய அரசு வழங்கியது.
இது தவிர அமெரிக்காவின் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வணிக நிர்வாகத்தின் கௌரவ டாக்டர் பட்டம், உருகுவே ஓரியண்டல் குடியரசின் பதக்கம், தொழில்நுட்ப நிறுவனங்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் பட்டங்களை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
இளம் தலைமுறைக்கோ, சாதிக்கத் துடிக்கும் நபர்களுக்கோ மட்டும் ரத்தன் டாடா ஆதர்ச நாயகனாக இருக்கவில்லை, சக போட்டியாளர்களுக்குமே அவர் ஆதர்ச நாயகனாக இருந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. 86 வயதான ரத்தன் டாடாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ரத்தன் டாடா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், மும்பையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து புதன்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது. தொழில்துறையில் ஜாம்பவானாக வலம் வந்த ரத்தன் டாடாவின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பல உலகத் தலைவர்களும், தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில்துறையின் கிங் மேக்கராக திகழ்ந்த ரத்தன் டாடாவின் பெயர் எந்த பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறதோ இல்லையோ… மனிதநேயர் என்ற பட்டியலில் அவரது பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை!