காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபார்வதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமாக காரைக்கால் ஜிப்மர் வளாகம் அருகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 50 ஏக்கர் நிலம் உள்ளது.
இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அரசு விற்பனை செய்வதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன.
இதுதொடர்பாக ஆட்சியர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இடைத்தரகராக செயல்பட்ட சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தனிப்படை போலீசார் துணை ஆட்சியர் ஜான்சனை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் 15 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிரடியாக கைது செய்தனர்.