டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் மும்பையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, இந்தியாவின் மிக முக்கியமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.
நோயல் டாடா முதன்முதலாக டாடா சர்வதேச நிறுவனத்தில்தான் தன் பணியை தொடங்கினார். 1999ஆம் ஆண்டில் டிரெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்ற பிறகு, வெஸ்ட்சைடை லாபகரமானதாக மாற்றியதில் நோயல் டாடாவிற்கு முக்கிய பங்கு உண்டு என்றே கூறவேண்டும்.
2003ஆம் ஆண்டு இவர் டைட்டன் மற்றும் வோல்டாஸின் இயக்குனர் ஆனார். மேலும், டாடா அறக்கட்டளையில் அறங்காவலராகவும் நோயல் டாடா இருந்து வந்தார்.
டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டதன் மூலம், டாடா அறக்கட்டளையின் தலைவராக டாடா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
















