பயணிகள் ரயில், பிரதான தண்டவாளத்தில் செல்லாமல், லூப் பாதையில் நுழைந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து பீகார் மாநிலத்தின் தர்பங்காவுக்கு செல்ல, நேற்று காலை 10.34 மணிக்கு பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
சென்னை வழியாக சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, தர்பங்காவுக்கு இந்த ரயில் செல்லவிருந்தது. ரயிலின் 27 பெட்டிகளில் ஆயிரத்து 300 பயணிகள் இருந்தனர்.
நேற்றிரவு 7.37 மணிக்கு சென்னை பெரம்பூர் வந்தடைந்த பயணிகள் ரயில், வியாசர்பாடி ஜீவா வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தது.
இரவு 8:27 மணிக்கு அந்த ரயில் பொன்னேரியை சென்றடைந்தது. தொடர்ந்து பிரதான தண்டவாளத்திலேயே பயணிக்கும்படி ரயிலுக்கு சிக்னல் தரப்பட்டது. ஆனால், கவரப்பேட்டை அருகே சென்றபோது பிரதான லைனில் பயணிக்காமல், ‘லுாப்’ லைனுக்குள் பயணிகள் ரயில் நுழைந்து விட்டது.
அந்த பாதையில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் பின்புறமாக வேகமாக மோதியது. இதனால், சரக்கு ரயில் தீப்பிடித்த நிலையில், பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.