மறைந்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக நான்கு பேர்களை நியமித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 9ம் தேதி, தனது 86 வது வயதில், ரத்தன் டாடா மரணமடைந்த பிறகு அவரது ஒன்று விட்ட சகோதரர் நோயல் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தனது ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், வழக்கறிஞர் டேரியல் கம்பாட்டா மற்றும் தனது நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி ஆகியோரை தனது உயிலை நிறைவேற்றுபவர்களாக ரத்தன் டாடா நியமித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நான்கு பேரில் ஒருவரான, டாடாவின் நம்பிக்கைக்குரிய மெஹ்லி மிஸ்திரி இரண்டு முக்கிய டாடா அறக் கட்டளைகளான ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளைகளில் அறங்காவலராக இருந்திருக்கிறார். இந்த இரண்டு அறக் கட்டளைகளும் , டாடா சன்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.
மேலும், ப்ரீச் கேண்டி மருத்துவமனை, டாடா இந்திய சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் மேம்பட்ட கால்நடை பராமரிப்பு அறக்கட்டளை குழுவிலும் மிஸ்திரி பணியாற்ற்றி வருகிறார்.
டாடாவின் ஒன்று விட்ட சகோதரிகளான ஷீரின் மற்றும் டீன்னா ஜெஜீபாய், அறப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டீன்னா ஏற்கெனவே , 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், டாடா அறக்கட்டளை குழுவில் பணியாற்றி இருக்கிறார்.
முன்னதாக டாடாவின் இரண்டு அறக்கட்டளைகளிலும் அறங்காவலராக இருந்த கம்பாடா ஏறக்குறைய 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு தான் டாடா அறக் கட்டளை பதவிக்குத் திரும்பி இருக்கிறார்.
ரத்தன் டாடாவின் உயிலை தான் தயாரிக்கவில்லை என்றும், டாடா மறைவுக்குப் பிறகே உயிலைப் பார்ப்பதாகவும் கூறியிருக்கும் கம்பாடா, உயிலின் உள்ளடக்கம் பற்றி ரத்தன் டாடாவுக்கு ஆலோசனை ஏதும் வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் வைத்திருந்தார். டாடா குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் டாடா சன்ஸ் பங்கின் மதிப்பு மட்டும் 16.71 லட்சம் கோடி ரூபாயாகும்.
இந்த கணக்கின் படி,ரத்தன் டாடா 7900 கோடி ரூபாய் நிகர மதிப்புடைய பணக்காரராக இருந்தார் என்று ஹுருன் அறிக்கை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
உயில் நிறைவேற்றப்படாத வரை, இறந்த நபரின் சொத்துகளைப் பராமரிக்கும் பொறுப்பு உயிலை நிறைவேற்றுபவர்களுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
















