வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை தாக்கி சித்ரவதை செய்த விவகாரத்தில் வேலூர் சரக முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைகள் செய்வதற்காக, கைதி சிவக்குமாரை அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாக, அவரது தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கைதி சிவக்குமார் சித்ரவதை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால், டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் சென்னை புழல் -2 சிறைக்கும் மற்றும் கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வேலூர் சரக முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
















