சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைனை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மூலக்கடை பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் போல் நடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கன்னியாகுமரி அகதிகள் முகாமில் உள்ள இலங்கையை சேர்ந்த விஜய்குமார் என்பவர், மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் , சென்னையில், மணிவண்ணன் என்பவரது வீட்டில் 900 கிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 3 கிலோ போதைப்பொருள், 15 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மெத்தபெட்டமைன் எப்படி கிடைத்தது, யார் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்டவை குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.