முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை ஒட்டி, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் 117ஆவது பிறந்தநாள் மற்றும் 62ஆவது குரு பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
மதுரை கோரியப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், தேவரின் பாதையில் பயணிக்கும் கட்சியாக பாஜக உள்ளதாக கூறினார்.
ஆன்மிகமும், அரசியலுக்கும் கலக்க முடியாது என்ற உதயநிதி கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அவர், ஆன்மிகமும் அரசியலும் எப்போதும் இணைந்தேதான் இருக்கும் என கூறினார்.
கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, வி.கே.சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு, தமாகா தலைவர் ஜிகே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், இன்றும், நாளையும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தினார்.