சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு போதிய வசதிகளை செய்து தரவில்லை என வெளியூர் செல்லும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். எனினும் போதிய பேருந்துகள் இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.
பேருந்து ஏற்பாடுகளில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மக்கள், அரசுப் பேருந்துகள் கிடைப்பது மிகுந்த சிரமமாக உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 2 ஆண்டுகளை விட இந்தாண்டு எந்த பிரச்னையும் இல்லாமல் பேருந்துகள் சுமூகமாக இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இதுவரை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 3 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் சிவசங்கர் கூறினார்.