டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வேளச்சேரி பகுதி மக்கள் ரப்பர் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
வந்தாரை வாழவைக்கும் பெருமை கொண்ட சென்னையில் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் வந்தவர்கள் உட்பட அனைவரையும் வெளியேற்றும் ஊராக அமைந்திருக்கிறது. கடந்த கால டிசம்பர் மாதங்கள் ஏற்படுத்திய வெள்ள சேதங்கள் சென்னையில் வசிக்கும் ஒவ்வொருவரின் மனதில் ஆறாத வடுவாக இன்றளவும் பதிந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொள்கிறது. அதிலும் வேளச்சேரி பகுதி மக்களின் உயிர் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சாரம், தொலைதொடர்பு என எந்தவித வசதிகளும், அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும் கிடைக்காமலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
நடப்பாண்டு டிசம்பர் மாதம் நெருங்கி வரும் நிலையில் அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த வேளச்சேரி பகுதி மக்கள், மழை வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையால் ஏற்படும் பாதிப்புகளின் போது அரசு மற்றும் மாநகராட்சியின் உதவியைப் பெற ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு ரப்பர் படகுகள், லைப் ஜாக்கெட்டுகள் என மழை மற்றும் புயால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை முழுமையாக தற்காத்துக் கொள்ளும் பணிகளில் வேளச்சேரி பகுதி இறங்கியுள்ளனர்.
மழை வெள்ள காலங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வேளச்சேரி டான்ஸி நகரில் உள்ள குடியிருப்புவாசிகள் இணைந்து நிதி திரட்டி ரப்பர் படகு மற்றும் லைப் ஜாக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மாநகர மக்கள் அச்சப்படும் சூழல் நிலவும் நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்கவோ, மழைவெள்ளத்திலிருந்து அவர்களை பாதுகாக்கவோ தமிழக அரசு எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாததே, குடியிருப்புவாசிகளே ரப்பர் படகுகளையும் லைப் ஜாக்கெட்டுகளையும் வாங்கக்கூடிய அவல நிலையை உருவாக்கியுள்ளது.