கேரளாவில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில் தகுதிவாய்ந்த பழங்குடியின மக்களை புறக்கணித்ததாகக் கூறி, கிராம பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்தில் அடைத்து வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக – கேரள எல்லைப் பகுதியான வெள்ளரடா அருகே அம்புரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட அங்கன்வாடியின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், தகுதிவாய்ந்த பழங்குடியின ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த பழங்குடியின மக்கள், பஞ்சாயத்து செயலாளர் உட்பட 7 ஊழியர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பஞ்சாயத்து ஊழியர்களை அலுவலகத்திற்குள் அடைத்துவைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்ற நிலையில், பழங்குடியின மக்கள் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.