தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே என பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள வேங்கீஸ்வரர் கோயிலில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
வேங்கீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்து அறநிலையத்துறை தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளை கோயில்களுக்கு தக்காராக நியமித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நெற்றியில் இடும் போலியான மத சின்னம் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனவும் அவர் கடுமையாக சாடினார்.