பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பால் இரண்டு நாட்கள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாடு இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் உத்திகளை வலுப்படுத்த, பல்வேறு அரசு துறைகளின் ஒருங்கிணைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான சட்டக் கட்டமைப்பை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கை ஆராய்தல், சர்வதேச சட்ட ஒத்துழைப்பு, இந்தியா முழுவதும் உள்ள பயங்கரவாத வலையமைப்புகளை அகற்றுவதற்கான உத்திகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் மத்திய அரசு அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.