மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 2 வழித்தடங்களில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே 31.39 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், கோவையில் 39 கிலோ மீட்டர் தொலைவில் அவிநாசி சாலையில் கருத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகத்திடம் சமர்பித்தது.
திட்ட அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு கூடுதல் ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கையை மீண்டும் சமர்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், மத்திய அரசு கோரிய ஆவணங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்ததால், ஓரிரு வாரங்களில் கூடுதல் ஆவணங்களுடன் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் மீண்டும் சமர்பிக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.