தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர், அமெரிக்க அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என, அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், தனது அரசில் பணியாற்ற இருப்பவர்களை தேர்வு செய்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்குக்கு அமைச்சர் பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ கொடுப்பேன் என ட்ரம்ப் வெளிப்படையாக பேசி இருந்தார்.
இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் திறன் துறைக்கு தலைமை வகிப்பார்கள் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2 அற்புதமான அமெரிக்கர்களும் தனது அரசில் பணியாற்றுவதற்கும், வீண் செலவை குறைக்கவும், அமெரிக்காவை காக்கவும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு ஜூலை 4ம் தேதிக்குள் அவர்களின் பணி முடிவடையும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவில் திறமையான அரசாங்கம் அமைந்திருப்பது அமெரிக்காவுக்கு கிடைத்த பரிசு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.