கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு இன்று வழக்கம்போல் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது பணியில் இருந்த புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜியை, சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
இதில் மருத்துவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் சந்திரசேகர், பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.