சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சிவகங்கை மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை கிண்டி புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி என்பவரை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், அவர் படுகாயம் அடைந்த மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக, புறநோயாளிகள் பிரிவில் 40 மருத்துவர்கள் பணியில் இருக்கும் நிலையில், தற்போது ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். மேலும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் சொந்த ஊருக்கு திரும்பும் அவலமும் ஏற்பட்டுள்ளது.