இலங்கை அதிபர் தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் அனுர குமர திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையில் நடைபெற்று முடிந்திருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக சற்று விரிவாக பார்க்கலாம்.
இலங்கையின் 10வது நாடாளுமன்றத் தேர்தலில் 159 தொகுதிகளை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 145 தொகுதிகளை கைப்பற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சாதனையை முறியடித்துள்ளது.
அனுர குமராவின் தேசிய மக்கள் சக்தி 68 லட்சத்து 63 ஆயிரத்து 186 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 61.56 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. (NEXT)ஐக்கிய மக்கள் சக்தி 19 லட்சத்து 68 ஆயிரத்து 716 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 17.66 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழரசு கட்சி 2 லட்சத்து 57 ஆயிரத்து 813 வாக்குகளை பெற்றுள்ளதுடன் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அதனை தவிர்த்து மீதமுள்ள அனைத்து தமிழர் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
மலையக மக்கள் அதிகமாக வாழும் கண்டி, மாத்தாளை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த முறை இலங்கை தமிழரசுக் கட்சி வசம் இருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை இம்முறை தேசிய மக்கள் கட்சி தன் வசப்படுத்தியுள்ளது.
இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான தமிழர் பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ச குடும்பம் இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்திலிருந்து அடியோடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியையே சந்திக்காத டக்ளஸ் தேவானந்தா, இந்த தேர்தலில் முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாக கூறப்படும் நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.