இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது தைனுபுவை தலைநகர் அபுஜாவில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய பிரதமர், கடந்த மாதம் நைஜீரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்தியா சார்பில் 20 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைத்ததை நினைவுகூர்ந்தார்.
தனது 3-ஆவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் நைஜீரியா வந்ததை பெருமையாக கருதுவதாகவும், 17 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் அந்நாட்டுக்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நைஜீரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கூட்டாக ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து வழங்கியதை நினைவுகூர்ந்தார்.
அத்துடன் இந்தியாவும் நைஜீரியாவும் இணைந்து பயங்கரவாதம், கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.