சென்னையில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில், படுகாயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். மெக்கானிக்காக பணியாற்றி வரும் இவர் தனது இருசக்கர வாகனத்தில், மனைவி கௌசல்யா மற்றும் இரண்டரை வயது ஆண் குழந்தை புகழ் வேலுடன் வியாசர்பாடி மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்த மாஞ்சா நூல் கண்ணிமைக்கும் நேரத்தில், குழந்தையின் கழுத்தில் சிக்கி அறுத்து விபத்து ஏற்பட்டது. இதில் கழுத்தில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில், குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, வியாசர்பாடி புதிய மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கறிவெட்டும் தொழிலாளியான ஜிலானி பாஷா என்பவருக்கும், மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை வியாசர்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான காற்றாடிகள், மாஞ்சா நூல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தடையை மீறி மாஞ்சா காற்றாடி விடும் நபர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.