திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை தாக்கியதில், பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர். கோயிலில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், யானைகளுக்கான புத்துணர்வு முகாம்களை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானைகளின் இயல்புநிலை மாறாமல் இருப்பதற்காகவே புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக அறநிலையத்துறை சார்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படாததே, திருச்செந்தூர் சம்பவத்திற்கு காரணம் என குற்றம்சாட்டிய அவர், புத்துணர்வு முகாம்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.