மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும் அன்றைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி 55-க்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 128 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் அந்த கூட்டணி 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நாக்பூர் தென் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், 59 ஆயிரத்து 462 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
பராமதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் அஜித் பவார் 91 ஆயிரத்து 228 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
கோப்ரி – பச்பகாடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏக்நாத் ஷிண்டே, 80 ஆயிரத்து 185 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.