விவாகரத்து வழக்கு தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.
கடந்த 2009-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி, கருத்து வேறுபாடால் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்குவதுடன், தங்களது திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஜெயம் ரவி கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை 3-வது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஜெயம்ரவி – ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜரான நிலையில், இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 7-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
















