மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடலோர கிராமங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
மேலும் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் வழக்கத்திற்கு மாறாக கடும் உயரத்துடன் அலைகள் எழுப்பி கரையை தாக்கி வருகின்றன. இதனால் 10 கி.மீ தூரத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் வேரோடு கீழே சாய்ந்துள்ளன.
கடலோர பாதுகாப்பு அரணாக விளங்கிய சவுக்கு காடுகளில் இருந்து மரங்கள் வேரோடு சாய்ந்து வரும் நிலையில் அவற்றை பாதுகாக்க கருங்கல் தடுப்பு ஏற்படுத்த வனத்துறை மூலம் சவுக்கு காடு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.