ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Proba-3 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்ட நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளியில் (SPADEX) விண்கலங்களை இணைக்கும் பரிசோதனையை நடத்துவதற்காக, இஸ்ரோ PSLV-C60 யை விண்ணில் செலுத்த உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 10 ஆண்டுகளாக, இந்திய விண்வெளி நிறுவனம் பல சாதனைகளைச் செய்து வருகிறது. மேலும், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது. இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றி, சந்திரனின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை நாட்டுக்குப் பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து, சந்திரயான்-4, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1, சுக்கிரனை ஆய்வு செய்ய சுக்ராயன், செவ்வாயை ஆய்வு செய்ய மங்கள்யான் மற்றும் ககன்யான் என இஸ்ரோவின் விண்வெளி செயல் திட்டங்கள் உலகையே ஆச்சரியப் பட வைத்துள்ளன. மேலும், விண்வெளியில், இந்திய விண்வெளி நிலையம் அமைக்கவும், இஸ்ரோ தயாராகி வருகிறது.
கடந்த வியாழக் கிழமை, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Proba-3 மிஷனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், Space Docking Experiment என்ற SPADEX விண்வெளியில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் பரிசோதனையை நடத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கான PSLV-C60 ராக்கெட் தயாராக இருப்பதாகவும், அதன் இறுதி கட்ட சோதனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் இந்தியாவின் முதல் பணி இது என்பது குறிப்பிடத் தக்கது.
SPADEX இஸ்ரோவின் மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும். இந்த தொழில்நுட்பம் இரண்டு விண்கலங்களை சுற்றுப்பாதையில் இணைக்க அனுமதிக்கின்றன.
விண்வெளி நிலையங்களை நிர்வகிப்பதற்கும் சிக்கலான விண்வெளித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் SPADEX முக்கிய பங்கு வகிக்கிறது.
விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்தைப் பாதுகாப்பாக இணைக்கவும், ஏவுவாகனங்களுக்கு இடையே சுமூகமாக பரிமாற்றம் செய்யவும் SPADEX உதவுகிறது.
பாதுகாப்பான விண்வெளிப் பயணத்தை உறுதி செய்யும் SPADEX , விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தாலும், பூமிக்கு திரும்பினாலும் வெற்றிகரமாக தங்கள் ஆய்வுப் பணிகளை முடிக்க உதவுகிறது.
SPADEX பணிக்காக 400 கிலோ எடையுள்ள சேசர் மற்றும் டார்கெட் என்ற 400 கிலோ எடையுள்ள இரண்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வாங்கி இருக்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டு, சுமார் 700 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மணிக்கு சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும், இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றையொன்று நெருங்கும்போது, மோதலை தவிர்க்க கவனமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த துல்லியமான இணைப்புகள் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை சாத்தியமாக்குகின்றன.
எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு SPADEX அமைப்பு மிக அவசியமானதாகும். இந்த SPADEX முயற்சி வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் விண்வெளியில் செயற்கை கோள்களை இணைக்கும் திறன் கொண்ட சில நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும்.
இந்தியாவின் SPADEX பரிசோதனை என்பது, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டதாகும். குறைந்த செலவில் இந்த தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு, ககன்யான் திட்டத்தின் மூலம், இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படும் நிலையில், SPADEX தொழில்நுட்பம் மிக முக்கியமானதாகும்.
SPADEX வெற்றி ககன்யான் வெற்றிக்கு வழி வகுக்கும். ககன்யான் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று விடும்.