புதுச்சேரியில், மழை வெள்ள நிவாரணமாக 177 கோடியே 36 லட்சத்திற்கான அரசின் கோப்பிற்கு, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடந்த நவம்பர் 30ம் தேதி ஒரேநாளில் 48.4 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்து 54 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
இதற்கு சுமார் 177 கோடி செலவாகும் என அரசு சார்பில் நிதித்துறையின் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த கோப்புகளுக்கு, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிவாரண நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளது.