உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்.
இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக குகேஷ் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர். சாம்பியன் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து குகேஷ் வாழ்த்து பெற்றார். தமிழக அரசு சார்பில் அவருக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் விளையாட்டை போல பல காய்களை விட்டுக்கொடுத்து, வெட்டுப்பட்டு வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை என்று தெரிவித்தார். மேலும், 7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டத்தை வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று உலக சாம்பியனாகி இருக்கிறார் குகேஷ் என பாராட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக குகேஷை வாழ்த்தி பேசிய முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலக அளவில் செஸ் விளையாட்டில் தமிழ்நாடு முக்கிய இடம் பெற்றுள்ளதாக கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய செஸ் சாம்பியன் குகேஷ், தான் சுற்றி இருப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை வடிவமைத்து நிற்பதாக குறிப்பிட்டார். மேலும், கேண்டிடேட்ஸ் தொடருக்கு தேர்வானதன் வாயிலாக மட்டுமே தாம் உலக சாம்பியன் ஆனதாக கூறிய அவர், கனவு நனவாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.