அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கு கண் துடைப்புக்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல், வீடு வீடாக சென்று கருத்துகளை கேட்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டத்திற்கு கருத்து கேட்கும் கூட்டம் எர்ணாவூரில் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை ஆணையர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, விசிக, SDPI உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்று திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது சீமானுக்கு எதிராக திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய சீமான், மின்சாரம் உற்பத்தி செய்ய பல்வேறு வழிகள் இருக்கும்போது அனல்மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்ய தமிழக அரசு துடிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
நீர், காற்று, உணவு என அனைத்தும் மாசான பிறகு மின்சாரத்தை வைத்து என்ன செய்வது? எனவும் அவர் வினவினார். சம்பந்தப்பட்ட மக்களிடம் கேட்காமல் கண் துடைப்புக்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய சீமான், வீடுவீடாக சென்று மக்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.