அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த 2022-ஆம் ஆண்டு கடும் பனியில் உறைந்து பலியாயினர்.
இந்த விவகாரத்தில், குஜராத்தை சேர்ந்த பாவேஷ், அசோக்பாய் படேல் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கனடாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய விரும்பும் நபர்களுக்கு உதவியது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், மும்பை, நாக்பூர், காந்திநகர், வதோதரா உள்ளிட்ட 8 நகரங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்கடத்தலில் ஈடுபட்ட 2 நிறுவனங்கள் சிக்கின.
அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பி வைக்க இந்நிறுவனங்கள் 55 லட்சம் ரூபாயில் இருந்து 60 லட்சம் ரூபாய் வரை பெறுவதும், கனடாவை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இத்தகைய கல்லூரிகள் குறித்தும், இந்திய நிறுவனங்களின் பங்கு குறித்தும் அமலாக்கத்துறை தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.