ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் வான் வழித் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தாக்குதலுக்கு இன்னும் பாகிஸ்தான் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தக்க பதிலடி கொடுப்போம் என்று ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் மூளும் ஆபத்து உருவாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP ) என்ற பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத குழுவினர், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவம் மீது தலீபான் தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதக் குழுவினர் பொறுப்பேற்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தீவிரவதாகள் நடத்திய இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு, ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் நுழைந்த பாகிஸ்தான் விமான படை குண்டு மழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
லாமன் உட்பட ஏழு கிராமங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முர்க் பஜார் கிராமம் தீப்பிடித்து எரிந்ததாகவும், இதனால் அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஆப்கான் எல்லைக்கு அருகில் உள்ள தலிபான் தளங்களைக் குறிவைத்து இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் தாலீபானின் போர் பயிற்சி நிலையம் அழிக்கப்பட்டது என்றும், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதி முகமது சாதிக் காபூலுக்குச் சென்ற சில மணி நேரத்துக்குப் பின் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது. தங்கள் நிலத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பது தங்களின் ‘சட்டபூர்வமான உரிமை’ என்று கூறியுள்ள தலிபான் இராணுவ அமைச்சகம், பாகிஸ்தானின் தாக்குதல் ,அனைத்து சர்வதேச கொள்கைகளுக்கும் எதிரான ஒரு மிருகத்தனமான செயலாகும் என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு , பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதக் குழுவுக்கு புகலிடமும் பாதுகாப்பும் அளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சமீப ஆண்டுகளாக பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதக் குழுவைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
1,640 மைல்களுக்கு மேல் நீண்டுள்ள பாகிஸ்தான் எல்லையை
ஆப்கானிஸ்தான் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையில் முள்வேலி அமைக்க பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளது. தலிபான்கள் இதை ஏற்கவில்லை. அதனால் தலிபான் தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
தாலிபான்கள் மீதான பாகிஸ்தானின் இந்த புதிய இராணுவ நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எல்லையை பகிர்ந்து கொள்ளும், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளுமா? என்பதை உலகமே உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி உள்ளது.