மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்களுக்கான அரசியல்வாதியாக வலம் வந்தவர் விஜயகாந்த் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் மாற்றுசக்தி வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டியவர் விஜயகாந்த் என்றும் புகழாரம் சூட்டினார்.
இதைத்தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயகாந்த்தும், பிரேமலதாவும் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்கள் என தெரிவித்தார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணியவர் விஜயகாந்த் எனவும் தமிழிசை கூறினார்.
















