ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சில தினங்களே உள்ள நிலையில், அரசு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டுமென காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தை திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தென் தமிழகத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண்கின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளை வளர்ப்போர் காளைகளுக்கு நடைபயிற்சி, மண் முட்டுதல், நீச்சல், மாடுபிடி வீரர்களிடம் காளைகள் சிக்காத அளவிற்கு மாடு பிடி உள்ளிட்ட சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர்
இந்தப் பயிற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள காளைகளுக்கு வாழைப்பழம், பருத்தி விதை, கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு என உணவுகளை உரிமையாளர்கள் தங்களின் காளைகளுக்கு வழங்குகின்றனர்.
இப்படி சிறப்பு பயிற்சிகள் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு களம் காணும் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சிறந்த காளை என்றும், தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில் முதல் கார் வரை விலை உயர்ந்த பரிசுகளை தட்டிசெல்கின்றன.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கு உரிமையாளர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராக திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியை சேர்ந்த ஜெயமணி என்ற பெண் கடந்த 8 ஆண்டு காலமாக காளையை வளர்த்து தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.
இவர் வளர்க்கும் காளை மதுரை, திருச்சி, தேனி, சிவகங்கை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பரிசுகளை வென்று வெற்றி வாகை சூடியுள்ளது. இவ்வாறு பல போட்டிகளில் காளையை வெற்றி பெற செய்து ஊருக்கு பெருமை சேர்த்த ஜெயமணி, கடந்த 2 ஆண்டுகளாக காளைகளை போட்டியில் பங்கேற்க வைப்பதில் பல சிக்கல்கள் எழுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடை பிடிக்கப்படும் டோக்கன் முறையே என்கிறார் ஜெயமணி. டோக்கன் முறையால் பல சிக்கல்கள் எழுவதாக கூறும் ஜெயமணி, அந்த முறையை ரத்து செய்து பாரம்பரிய முறையை கடைப்பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார்.
பல ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் வாடிவாசலில் காளைகளை களமிறக்கிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் டோக்கன் முறையால் உரிமையாளர்கள் கடும் இன்னுலுக்கு ஆளாவதாக கூறுகிறார் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஜான் பீட்டர்.
டோக்கன் முறையால் தங்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் அவர், டோக்கன் வாங்க ஆயிரக்கணக்கில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதாக வேதனை தெரிவித்தார்.